×

திருவண்ணாமலையில் விடுமுறை நாட்கள் எதிரொலி அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

*ஏராளமான பக்தர்கள் திரண்டனர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை காரணமாக, நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே, 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தொடர் அரசு அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
அதன்படி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறையால் கடந்த இரண்டு நாட்களாக, கோயிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்தது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பொது தரிசன வரிசை, வெளிப்பிரகாரத்தையும் கடந்து நீண்ட தூரம் வரை இருந்தது. அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகரித்திருந்தது. மேலும், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்துச் செய்யப்பட்டது.

மேலும், தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, ஒற்றை வரிசை விரைவு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. எனவே, தேரடி வீதி மற்றும் கடலைக்கடை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களால் நெரிசல் காணப்பட்டது.

நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், இந்த வாரம் முழுவதும் அண்ணாமலையார் கோயில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சிறப்பு தரிசனம் அமர்வு தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலையில் விடுமுறை நாட்கள் எதிரொலி அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Annamalaiyar temple ,Thiruvannamalai ,Annamalaiyar ,Temple ,
× RELATED அண்ணாமலையார் கோயில் ஊழியர் விபத்தில் பலி: மாட்டு வண்டி மீது பைக் மோதல்